சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாடு தழுவிய போராட்டம் – இடதுசாரிகள் பேசுகின்றனர்!
வியாழன், 7 பிப்ரவரி 2008 (12:44 IST)
மதவாத சக்திகளின் எதிர்ப்பிற்கு மதிப்பளித்து சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதைத் தடுக்க நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவது தொடர்பாக இடதுசாரிகள் நாளை பேசி முடிவெடுக்கின்றனர்.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சேதுக் கால்வாய் திட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்துவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜனிடம் தான் பேசியதாகவும், வெள்ளிக்கிழமை இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பேசி இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் கூறினார்.
சேது சமுத்திரக் கடல் பகுதியில் மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங் கூறியிருப்பது, சேதுத் திட்டத்தை குழிதோண்டிப் புதைக்கும் சதிச் செயலாகும் என்று தா.பாண்டியன் குற்றம்சாற்றினார்.
ரூபாய் 2,400 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக திட்டத்தைத் துவக்கி வைத்தபோது பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை சுட்டிக் காட்டிய பாண்டியன், எவ்வித முன் ஆய்வும் செய்யமலா அத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று கேள்வி எழுப்பினார்.
சேதுக் கால்வாய் திட்டம் குறித்து மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை நிதி நிலை அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிய பாண்டியன், சேதுத் திட்டத்தை கைகழுவ நினைக்கும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு இடதுசாரிகள் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறினார்.