இதுகுறித்துத் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் என்.எஸ். பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெளிநாட்டு மது வகைகளை விட கள் உடலுக்கு நலம் பயக்கக் கூடியது. அன்னிய மது வகைகளில் கிடைக்கும் லாபம் ஒரு சில முதலாளிகளுக்கே சென்று சேரும். ஆனால் கள் விற்பனையால் கிடைக்கும் லாபத்தால் பல லட்சம் விவசாயிகளும், மரம் ஏறும் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள். எனவே கள் இறக்கி விற்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.
மேலும், "தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான தென்னை விவசாயிகளும், பல லட்சம் மரம் ஏறும் தொழிலாளர்களும் உள்ளனர். தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கள் இறக்கி விற்க அனுமதித்தால் இவர்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.
இதனால், கள் இறக்கி விற்க அனுமதி வழங்கக்கோரியும் தேங்காய் விலை கிலோ ரூ.15 என நிர்ணயித்து கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் நாளை காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
பின்னர், இதே கோரிக்கைகளை முன் வைத்து பிற்பகல் 3 மணியளவில் சென்னை தொலைக்காட்சி நிலையம் எதிரே உள்ள அண்ணா கலை அரங்கத்தில் சர்வ கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கருத்தரங்கும் நடைபெற உள்ளது.
இதில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்" என்றார் பழனிச்சாமி.