தி.மு.க. -காங். இடையே பனிப்போர் : இல.கணேசன்!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:09 IST)
விடுதலைப் புலிகள் விவகாரம், சேது சமுத்திர கால்வாய் திட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறுகையில், மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமடைந்து வருகிறது. அதே சமயம் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணியில் மேலும் பல புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பனிப்போர் தொடங்கி விட்டது. விடுதலைப் புலிகள் விவகாரம், சேது சமுத்திர கால்வாய் திட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இந்த இரு கட்சிக்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதே போல தி.மு.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் இடையே ஊடலும், கூடலுமாக நடைபெற்று வருகிறது.
வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி சென்னைக்கு வர உள்ளார். அன்றைய தினம் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார் என்று இல.கணேசன் கூறினார்.