எம்.ஆர்.எப் ஆலை மீண்டும் திறப்பு: தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:33 IST)
தமிழக அரசின் நடவடிக்கையை அடுத்து எம்.ஆர்.எப். தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் எம்.ஆர்.எப். ரப்பர் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி பரிந்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நிர்வாகம் ஆலையை மூடியது.
இதனையடுத்து, தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி ஆலையை மூடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து எம்.ஆர்.எப். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு உரிமை உள்ளது போல் கதவடைப்பு செய்வதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறத்து விட்டது. அதே சமயம் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் அதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் தடை விதித்தது.
கடந்த 3ஆம் தேதி முதல் இந்த தொழிற்சாலை கதவடைப்பு செய்யப்பட்ட நிலையில் உள்ளதால், ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.5,500 வீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதன் பின்னர், சட்டப் பேரவையில் தமிழக அரசு, எம்.ஆர்.எப். நிறுவனம் கதவடைப்பை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் இல்லையென்றால் ஆலையை அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் அந்நிறுவனத்தினர் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து மூடி கிடக்கும் ஆலையை திறப்போம் என்று உறுதியளித்தனர்.
அதன்படி இன்று எம்.ஆர்.எப். நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு திரும்பினர். எனினும் போராட்டத்தின் போது பணி இடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வர அனுமதியளிக்கவில்லை.
இதனையடுத்து தொழிற்சங்கங்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களையும் மீண்டும் பணிக்கு திரும்ப எம்.ஆர்.எப் நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.