தை முதல் நாளை புத்தாண்டாக்கிய முதல்வருக்கு 9 ஆம் தேதி பாராட்டு விழா!
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:19 IST)
தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 9ஆம் தேதி சங்கத் தமிழ்ப் பேரவை சார்பில் நடக்கிறது.
இது குறித்து சங்கத் தமிழ்ப் பேரவையின் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்த முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி பாராட்டும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இஞ்சிக்குடி இ.எம்.சுப்பிரமணியம் குழுவினரின் மங்கல இசையுடன் விழா துவங்குகிறது.
நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்குகிறார். பேரவை செயலாளர் எஸ்.ஜெகத் ரட்சன் வரவேற்று பேசுகிறார். பேரவை தலைவர் அமைச்சர் துரைமுருகன் தொடக்க உரையாற்றுகிறார். தமிழண்ணல், வ.அய்.சுப்பிரமணியன், ச.அகத்தியலிங்கம், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், ரா.நாகசாமி, ஊரனடிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இறுதியில் முதலமைச்சர் கருணாநிதி நன்றி கூறுகிறார்.
தமிழர்களே திரண்டு வந்து தைத் திங்கள் தந்தவரைத் தலைவணங்கிப் போற்றுங்கள். தமிழ் கேட்டு வாழ்த்துங்கள் என்று ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.