தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய உத்தரவைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் குன்னுரில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் பிப்ரவரி 4ம் தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது ஆட்சியில் பச்சைத் தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்த போது, நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகளுக்கு இரண்டு முறை மானியம் வழங்கினேன். தற்போது ஆளும் தி.மு.க. அரசு பச்சைத் தேயிலைக்கு மானியத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டது.
இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களின் போராட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க ஆதரவு நல்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இதனால், தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடர்பாக மத்திய அரசு அறிவித்திருக்கின்ற 65:35 சதவீதம் என்கிற புதிய உத்தரவைக் கண்டித்தும்;பலமுறை முறையிட்டும் குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்தும், தொடரும் சுகாதார சீர்கேடுகளைச் சரி செய்யாததைக் கண்டித்தும்; நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படுவதற்குக் காரணமாகும் வகையில் பெரிய பாறைகளை சட்டத்திற்கு விரோதமாக வெடி வைத்துத் தகர்ப்பதைக் கண்டித்தும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
பிப்ரவரி 4ம் தேதி குன்னூரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திடலில் நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜெயலலிதா பேரவைச் செயலாளர் என். தளவாய்சுந்தரம் தலைமை வகிப்பார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.