டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் புறப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பியது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 114 பயணிகளை ஏற்றிக்கொண்டு இண்டிகோ விமானம் நேற்று இரவு 9.30 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டது. வானில் பறந்துகொண்டிருக்கும்போது விமான இறக்கையின் மீது பறவை ஒன்று மோதியதுடன் அதிலேயே சிக்கிக்கொண்டது. இதில் விமான இறக்கை சேதமடைந்தது.
விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடமிருந்து கிடைத்த ரேடியோ சிக்னலின்படி, விமானத்தை தரையிறக்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இரவு 10.30 மணிக்கு விமானம் தரையிறக்கப்பட்டது.
இரண்டு மணிநேர முயற்சிக்கு பிறகு பறவையின் உடல் எடுக்கப்பட்டது. எனினும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகளுக்கு கட்டணத்தொகை திரும்ப வழங்கப்பட்டது.