புலிகளுக்கு ஆதரவா? ஜெயலலிதா பேச்சு : பேரவையில் அமளி, தள்ளிவைப்பு!
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (14:47 IST)
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு மென்மையான அணுகுமுறையை கையாள்கிறது என்றும், இந்த அரசிற்கு ஆட்சியைத் தொடர தார்மீக பொறுப்பு இல்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா பேசியதையடுத்து, சட்டப் பேரவையில் ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது!
ஓராண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு இன்று சட்டப் பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்து வரும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புச் சட்டம் உருவாக்குவது தொடர்பாக நடந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சட்ட வல்லுநர்களா என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து நிதியமைச்சர் அன்பழகன் பேச எழுந்தவுடன், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சேகர் பாபு ஆகியோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்தனர். தகவல் பரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியுடன் உறுப்பினர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருதரப்பினரையும் அமைதி காக்குமாறு அவைத் தலைவர் ஆவுடையப்பன் கேட்டுக்கொண்டது பயனளிக்காததை அடுத்து அவை நடவடிக்கைகள் 10 நிமிட நேரத்திற்கு தள்ளிவைத்தார். அவை மீண்டும் கூடியதும், அவை நடவடிக்கைகளை அமைதியாக நடத்திச் செல்ல அனைவரும் உதவ வேண்டும் என்று பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது பேச எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரிக்கை விடுத்திருந்தும், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல். திருமாவளவனை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 39ன் கீழ் திருமாவளவன் மீது எடுக்கலாம் என்றும், விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியதற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்க முடியும் என்றும் ஜெயலலிதா பேசினார்.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் 2004 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று பேசிய ஜெயலலிதா, உழலுக்காக முதன் முதலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசு தி.மு.க. அரசுதான் என்று கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் அன்பழகன், அரசிற்கு எதிரான அந்த குற்றச்சாற்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியது மட்டுமின்றி, டான்சி நில பேர ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா என்று கூறினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. அரசு அவசர நிலை பிரகடனம் செய்ததை எதிர்த்த காரணத்திற்காகத்தான் பதவி நீக்கம் செய்யப்பட்டது என்றும், ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய் என்றும் கூறினார்.
1991 ஆம் ஆண்டு தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி பரிந்துரை செய்ததன் அடிப்படையில்தான் சந்திரசேகர் அரசு அப்பொழுது தி.மு.க. அரசை கலைத்தது என்றும், அதன்பிறகுதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்றும் ஜெயலலிதா கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட முதலமைச்சர் கருணாநிதி, நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பலனும் இல்லை என்றும், அ.இ.அ.தி.மு.க. ஜெயலலிதா பிரிவும், ஜானகி பிரிவும் ஒருவர் மீது மற்றவர் கூறிய குற்றச்சாற்றுகள் பற்றி எல்லாம் கூட பேச முடியும் என்று கூறினார்.
அப்பொழுது கோபமாக எழுந்த ஜெயலலிதா, இந்த அரசிற்கு சட்டத்தைப் பற்றித் தெரியவில்லை. அது அரசாளும் தகுதியை இழந்துவிட்டது. அவர்களாகவே பதிவியை விட்டுச் செல்ல வேண்டும். இல்லையென்றால் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறிவிட்டு தனது கட்சியினருடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.