பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சேலம் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்கள் இன்று தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். உதவித் தொகை பெறுவதற்கு 60 விழுக்காடு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த கோரி தாங்கள் மனு கொடுக்க விரும்புவதாக அவர்கள் கூறினர். அவர்களை உள்ளே விட காவல்துறையினர் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் மாணவர்கள் சாலை மறியல் செய்தனர்.
அப்போது, மாணவர் ஒருவர் குடிநீர் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். கூட்டத்தில் இருந்த சில மாணவர்கள் திடீரென தலைமைச் செயலகம் எதிரே இருந்த சிக்னல் கம்பம் மீது ஏறி நின்று கொண்டு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டினர். அவர்களை இறக்க பேருந்து ஒன்றை கம்பத்தின் கீழே காவலர்கள் நிறுத்தினர்.
பின்னர் மாணவர்களை இறக்க காவலர் ஒருவர் கயிறுகட்டி ஏற முயன்றார். உடனே மாணவர்கள், பேருந்து மீது குதித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை இரண்டு பேருந்துகளில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்தனர்.
சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரி முன்பு இன்று காலை மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லிபர்டியில் இருந்து வடபழனி வரை பேருந்து வரிசையில் நின்று கொண்டிருந்தது. பின்னர் மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த திடீர் மறியலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.