''சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை உடனே அமல்படுத்திடவேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.
சென்னையில் வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் 3 நீதிபதிகள் கொண்ட குழுவில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிலையை மாற்றி தமிழகத்தை சார்ந்த நீதிபதிகளும் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள 44 நீதிபதிகளில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வெறும் 2 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். ஆனால் 10 நீதிபதிகள் இருக்கவேண்டும். குறைந்தது 5 பேராவது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கவேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மனுவை சட்ட அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பியுள்ளோம்.
மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளே வழக்கு மொழியாக இருக்கிறது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் தமிழை வழக்கு அனுமதி வழங்க காலம் தாழ்த்துவது ஏன்? என்று தெரியவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை உடனே அமல்படுத்திடவேண்டும் என்று ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.