போன் ஒட்டுக்கேட்பை நீதிபதி விசாரிக்க வேண்டும்: வைகோ!
வியாழன், 31 ஜனவரி 2008 (10:41 IST)
''தொலைபேசி பேச்சு ஒட்டு கேட்கப்படுவது பற்றி உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகள், தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்று ஒரு ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தியில், குறிப்பிடப்பட்டு உள்ள தொலைபேசிகள், உண்மையின் ஒரு சிறிய பகுதியே ஆகும்.
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் தொலைபேசி அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் எனக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி, ம.தி.மு.க.வில் எனது தொலைபேசி உட்பட எட்டு தொலைபேசிகள், ஒட்டுக் கேட்கப்படுகின்றன என அறிகிறேன்.
தமிழ்நாட்டில், தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் இந்த அராஜக போக்கு மிகவும் ஆபத்தானது. எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகள் மட்டும் அல்ல. ஆளும் கட்சியினரின் தொலைபேசிகளும், ஏன் சில அமைச்சர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என தெரிகிறது. இந்த அசாதாரணமான பிரச்சினை குறித்த முழு உண்மையும் வெளிவருவதற்கு, உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.