முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் டெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 கோடி அபராதமும் விதித்து சென்னை மத்திய புலனாய்வு கழக (சிபிஐ) சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்த போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கு சென்னை மத்திய புலனாய்வு கழக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அப்துல் கரீம் டெல்கி, அப்துல் வாகீத், பாலாஜி, ஜேக்கப் சாக்கோ, பீட்டர் கென்னடி, முன்னாள் டி.ஐ.ஜி. முகமது அலி, டி.எஸ்.பி சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி சேது, நிஜாமுதீன், அவரது மனைவி நஸ்நீன் உள்ளிட்ட 11 பேர் மீது ம.பு.க குற்றம் சாற்றியது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டன. இன்று இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மோசடி, அரசு ஆவணங்களை போலியாக தயாரித்தது உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான அப்துல் கரீம் டெல்கிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.3 கோடி அபராதமும் நீதிபதி விதித்தார். இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அப்துல் வாகீத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் கட்டத் தவறினால் 18 மாதங்கள் சிறை தண்டனையும், பாலாஜிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதமும், கட்டத்தவறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், பீட்டர் கென்னடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் கட்டத்தவறினால் பதிமூன்றரை மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் ஜேக்கப் சாக்கோவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும், கட்டத் தவறும் பட்சத்தில் 18 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டுமென் நீதிபதி என்.வேலு தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். 5 பேரும் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், எரவாடா சிறையில் அனுபவிக்கும் தண்டனையோடு சேர்த்து இந்த தண்டனை காலம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
குற்றத்தை ஒப்புக் கொள்ளாத முகமது அலி, சங்கர், ராமசாமி சேது, நிஜாமுதீன், அவரது மனைவி நஸ்நீன் ஆகிய 5 பேர் மீதான வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
ஏற்கனவே புனேவில் நடைபெற்ற முத்திரைத்தாள் மோசடி வழக்கில் டெல்கி, அப்துல் வாகீத், ஜேக்கப் சாக்கோ ஆகியோர் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.