இந்திய கப்பல் பொறியாளர்கள் குழுமத்தின் சார்பில் சர்வதேச கடல்சார் கருத்தரங்கு நாளை (31ஆம் தேதி) சென்னையில் துவங்குகிறது.
இது குறித்து கப்பல் பொறியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்வதேச கப்பல் துறை கருத்தரங்கு சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது. கருத்தரங்கின் துவக்க விழாவில் அமெரிக்க தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் டேவிட் டி ஹோப்பர் கலந்து கொள்கிறார். சுவீடன் நாட்டின் உலக கடல்சார் பல்கலைக் கழக தலைவர் டாக்டர் கார்ல் லாப்ஸ்டின், இந்திய கப்பல் துறை முன்னாள் செயலர் மற்றும் ஆலோசகர் டி.டி.ஜோசப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கடல்சார் பொறியாளர்கள் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட கடல்சார் வல்லுனர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் நடக்க உள்ளது. இதில் கப்பல் துறை சந்தித்து வரும் பிரச்சனைகள், எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பது குறித்த வழிமுறைகள் பற்றி விவாதிக்க உள்ளனர். இந்த கருத்தரங்கை முன்னிட்டு 16-க்கும் மேற்பட்ட பார்வைக் கூடங்கள் அடங்கிய கண்காட்சியும் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.