தமிழகம் வரும் ஜப்பான் நெல் நடவு இயந்திரங்கள்: வீரபாண்டி ஆறுமுகம்!
புதன், 30 ஜனவரி 2008 (10:18 IST)
ஜப்பானில் இருந்து இரண்டு நெல் நடவு இயந்திரங்கள் தமிழகம் வருகின்றன. மார்ச் மாதம் கோவை, மயிலாடுதுறை, பொன்னேரி ஆகிய இடங்களில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேளாண்மையில் இயந்திரங்களை பயன்படுத்துவது பற்றி அறிய தாய்லாந்து, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஜப்பான் நாட்டில் வேளாண் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் யான்மார் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு வந்தார்.
இந்நிறுவனத்தின் நெல் நடவு இயந்திரத்தை பார்வையிட்டு, இத்தொழில் நுட்பத்தை நம் விவசாயிகளும் பயன்பெற வேண்டி அந்த கம்பெனியின் நிர்வாகிகளை தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி அந்த கம்பெனியின் நிர்வாகிகள் நவம்பர் மாதம் தமிழகம் வந்து இங்கு நெல் பயிரிடும் முறைகளை அறிந்து சென்று நம் வயலுக்கு ஏற்ப நெல் நடவு இயந்திரம் தயார் செய்து செயல்முறை விளக்கங்களை செய்து காண்பிப்பதாக தெரிவித்து சென்றனர்.
அதன் அடிப்படையில் 24ஆம் தேதி கோவை வந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவை, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளின் நெல்வயல்களை பார்வையிட்டும் விவசாயிகளின் கருத்தை கேட்டும் வந்துள்ளனர். நேற்று காலை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்து முதற்கட்டமாக மார்ச் முதல் வாரத்தில் இரண்டு நெல் நடவு இயந்திரத்தை ஜப்பான் நாட்டில் இருந்து கொண்டு வந்து செயல்முறை நடத்திக் காட்டுவதாக தெரிவித்தனர்.
அதன்படி கோவை, மயிலாடுதுறை, பொன்னேரி ஆகிய மூன்று இடங்களில் நெல் நடவு இயந்திரத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு செயல்முறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.