விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசப்படுகின்ற பேச்சுக்களை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். அந்தவகையில், திருமாவளவனை கைது செய்யச் சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்; அப்படி சட்டத்தில் இடம் இருந்தால் அதனை செய்ய அரசு தயாராக உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சனை தொடர்பாக சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசியதாவது:
காங்கிரஸ் உறுப்பினர்களின் உணர்வுகளை நான் அறியாதவன் அல்ல. ஏறத்தாழ ஒரு வார காலமாக சென்னையிலும் மற்ற இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசு அனுமதிப்பதாக கருத்தில் கொண்டு அரசு மீது காங்கிரஸ் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திருமாவளவனாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் புலிகளை ஆதரித்து பேசுவதை சட்ட ரீதியாகத்தான் சந்திக்க வேண்டும். இதில் வேறு வழியில்லை.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியவர்கள் மீது பொடா சட்டம் பயன்படுத்தப்பட்டது சரியா? இல்லையா? என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசப்படும் பேச்சு குற்றம் ஆகாது என்று கூறப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதற்காக ஞானசேகரன் எடுத்துக் காட்டியிருப்பதற்கு ஏற்ப விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச நான் ஆதரவு தருவதாக கருதக்கூடாது. அரசு நடத்தும் எங்களுக்கு தர்ம சங்கடங்கள் இருப்பதை சொல்ல வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். இந்த அவையில் முன்பு ம.தி.மு.க. பற்றி பிரச்சனை எழுப்பப்பட்டபோது என் கருத்தைதெளிவாக கூறியிருக்கிறேன். விடுதலைப் புலிகளை பொறுத்தவரை ராஜீவ்காந்தி கொலைக்கு முன், அவரது கொலைக்கு பின் என்று தான் இந்த பிரச்சினையை அணுக வேண்டும் என்று கூறி இருக்கிறேன். எந்த நிலையிலும் அந்தக் கருத்தில் மாற்றம் இல்லை.
தி.மு.க. தோழமைக் கட்சிகள் இதுபோன்ற செய்திகள் வராமல் பார்த்துக்கொள்வது தான் அவர்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது. அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதனை நான் கூறவில்லை. தமிழகத்திற்கு ஊனம் எதுவும் வரக்கூடாது என்ற கருத்தில்தான் இதனை நான் கூறுகிறேன். ராஜீவ்காந்தி அன்றும் இன்றும் மதிக்கப்பட கூடிய இளம் தலைவர், பெரிய தலைவர், அவர் சரித்திரம் ஆகி விட்டார். அவருக்காக தொடர்ந்து கண்ணீர் வடிப்பதா என்று பேசுவது தவறு.
நிலைமை வக்கிரமாக மாறி விடக்கூடாது. விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார். அவ்வாறு கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர அரசு தயாராக இருக்கிறது. இத்துடன் இந்த பிரச்சினையை சுமூகமாக முடிப்பது நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.