பெண்ணை மிரட்டி 35 பவுன் நகை கொள்ளை

செவ்வாய், 29 ஜனவரி 2008 (14:57 IST)
ஈரோட்டில் பெண்ணை மிரட்டி 35 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பையும், அதிரிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு நகர் பகுதியில் உள்ளது மாணிக்கம்பாளையம். இங்குள்ள ஹவுஸிங் யூனிட் அருகே பழனியப்பா நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(42). நிதிநிறுவனம் மற்றும் ‌நில புரோக்கராக உள்ளார்.

இவரது மனைவி நிர்மலா(28). நேற்று மதியம் 3.15 மணிக்கு நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நிர்மலாவின் வீட்டுக்கு மொபட்டில் நான்கு பேர் வந்தனர். நால்வரும் முகமூடி அணிந்திருந்தனர். வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து நால்வரும் உள்ளே புகுந்தனர்.

ஒருவன் நிர்மலாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினான். மேலும் இருவர் நிர்மலாவின் வாய்க்குள் துணியை திணித்து, கைகளை பின்புறமாக கட்டினர்.

கொள்ளையரில் ஒருவன் மட்டும் நிர்மலாவின் கழுத்தில் கத்தியை வைத்தபடி இருக்க, மற்ற இருவரும் ஒவ்வொரு அறையாக சென்று நகைகளை தேடினர். பின், பீரோவில் இருந்த 35 பவுன் மற்றும் ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டனர். கடைசியாக நிர்மலாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுக்க முயன்றனர்.

நிர்மலா கெஞ்சவே தாலிக்கொடியை அறுக்கும் முயற்சியை கைவிட்டனர். நிர்மலாவை கட்டிப்போட்டு விட்டு மீண்டும் மொபட்டில் தப்பி ஓடிவிட்டனர். நிர்மலாவின் முனகல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்னர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் சோனல்மிஸ்ரா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். கை ரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்