''போடிநாயக்கனூரில் கோழிகள் இறந்ததற்கு காரணம் பட்டினி தானே தவிர கோழி காய்ச்சல் நோய் அல்ல'' என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், தேவனாம்பட்டியில் ஏராளமான கோழிகள் இறந்துள்ளதாக செய்திகள் சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தீவிர சோதனை மற்றும் இறந்த கோழிகளின் உடல்களை பரிசோதனை செய்து பார்த்த போது இந்த கோழிகள் பண்ணை அமைப்புகளால் தீவனம் வழங்கப்படாமல் பட்டினி கிடந்ததால் தான் இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இறந்த கோழிகளின் உடல்களை அப்புறப்படுத்துவது குறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத காரணத்திற்காக கோழிப் பண்ணையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் மீது இ.பி.கோ. 269 பிரிவின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை ஒரு இடத்தில் கூட கோழி காய்ச்சல் நோய்க்கான அறிகுறி தென்படவில்லை. எனவே கோழி இறைச்சி, முட்டை தாராளமாக சாப்பிடலாம் என்றும் தெரியப்படுத்தப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து கோழி முட்டைகள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இருந்து கோழி இறைச்சி, முட்டை உள்பட எந்த வித பண்ணைப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.