திரைப்படங்களிலும், சின்னத் திரைகளிலும் ஆபாசக் களஞ்சியங்கள் அரங்கேற்றப் படுவதாகவும், கலாச்சார சீரழிவு நடைபெறுவதாகவும் பா.ம.க.வுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேல்முருகன் பா.ம.க பேசுகையில், நமது நாட்டில் சின்னத்திரையிலும், வண்ணத்திரையிலும் ஆபாசம் தொடர்கிறது. மொழி, பண்பாடு, கலாச்சாரம் சீரழிவை நோக்கி செல்கிறது. இதைத் தடுக்க முதல்வர் முன்வரவேண்டும். சின்னத்திரைகளில் காணப்படுகின்ற காட்சிகளும், ஆடுகிற ஆட்டமும், போடுகிற கும்மாளமும் காண சகிக்காதவைகளாக இருக்கின்றன. முதல்வரின் பெயரால் வெளிவரும் தொலைக்காட்சியிலும் "மானாட மயிலாட' என்ற நிகழ்ச்சியில் அரைகுறை ஆடை களுடன் மார்க் போடுகிறார்கள். திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் மிகக் கேவலமான காட்சிகள் இடம்பெறுகின்றன.
துணை சபாநாயகர்: நீங்கள் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இடம் பெற்ற நிகழ்ச்சிகளை வர்ணிப்பதை பார்த்தால் `சீன் பை சீன்' பார்த்து இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் நாட்டியம் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை.
வேல்முருகன் : மக்கள் தொலைக்காட்சியை தவிர அனைத்து தொலைக்காட்சிகளிலும் பண்பாடு சீரழிவு நடப்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். முதல்வருக்கு இருக்கிற ஆயிரம் வேலைகளில் இதை அவர் கவனிக்காமல் இருந்திருக்க முடியும். இதை சுட்டிக்காட்டுவதற்காகத் தான் பேசுகிறேன். முதல்வர் விழாவின் போது அரைகுறை ஆடையுடன் ஒரு நடிகை கலந்து கொள்கிறார்.
ஆற்காடு வீராசாமி:- நடிகைகள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சட்டம் போட முடியாது. இதில் அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
வேல்முருகன் : கேவலமான காட்சிகளை தணிக்கைத்துறை ஏன் கண்டிக்கவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி.
அமைச்சர் துரைமுருகன்: ஆபாசத்துக்கு என்ன அளவு கோல் உள்ளது. இத்தனை அங்குலம் சட்டை போடுவது, பாவாடை அணிவது என்று நாம் சொல்ல முடியாது. உடை அணிவது பற்றி நாம் சொல்ல முடியாது. உறுப்பினர் வேல்முருகன் நடித்த படத்தில் கூட "ஜிங்கு ஜிக்கா' டான்ஸ் உள்ளது.
ஜி.கே.மணி (பா.ம.க.): அரை குறை ஆடை கட்டி நடுத்தெருவில் போக முடியுமா? எனவே இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். சமுதாய சீரழிவை தடுக்க வேண்டும்.
வேல்முருகன் : ஆங்கில கலப்பு இல்லாமல் படம் எடுத்து இருக்கிறோம். ஆபாசம் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கும் வகையில் சில படங்கள் தான் வருகின்றன. எப்.எம் ரேடியோ என்ற பெயரில் ஆபாசம் விதைக்கப்படு கிறது. உறவு முறைகள் கொச்சைப் படுத்தப்படுகின்றன. இதற்கு கட்டுப் பாடு வேண்டும் என்ற ஆதங்கத் துடன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உணர்வுடன் இதை கூறுகிறோம்.
ஆற்காடு வீராசாமி : வேல்முருகன் கருத்துக்கு நன்றி. நாகரிகத்தை காப்பாற்ற அவர் பேண்ட் சட்டைக்குப் பதிலாக வேட்டிசட்டை அணிந்து வரலாமே.
வேல்முருகன் : இது சீரியசான விஷயம். ஒரு பொறுப்புள்ள அமைச்சர் இதை நகைச்சுவையாக கருதக்கூடாது.
அமைச்சர் பொன்முடி : ஆடை என்பது அவரவர் வசதிக்காக அணிவது. உங்கள் வசதிக்காக நீங்கள் பேண்ட்சட்டை போட்டு இருப்பது போல காலத்திற்கு ஏற்ப ஆடைகள் மாறுகின்றன. இதில் கலாச்சார சீரழிவு ஒன்றும் இல்லை. பெண்கள் புடவைக்கு பதிலாக மாற்று உடைகள் அணிய வேண்டும் என்று பெரியாரே கூறியிருக்கிறார். அந்த காலத்தில் கோவணம் கட்டிக் கொண்டுதான் ஏர் உழுதனர். இப்போது வேட்டிக் கட்டிக் கொண்டு உழுவது போல் அல்ல. ஆனால் தற்போது மாற்றம் வந்துவிட்டது அல்லவா. எனவே, இந்த விஷயத்தை மிகைப்படுத்தக் கூடாது.