விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள், அரசியல் சாரா இயக்கங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதலமைச்சருக்கு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்து மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த இந்திரா காந்தியின் மகனும், சோனியாவின் கணவருமான ராஜீவ் காந்தி நம் தமிழ் மண்ணில் கொலை செய்யப்பட்டதை நாடு என்றென்றும் மறவாது.
இந்த படுகொலைக்கு காரணம் விடுதலைப்புலிகள் தான் என்ற அடிப்படையில் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது. மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எந்த ரூபத்தில் யார் ஆதரித்தாலும், அதை அனுமதிக்க முடியாது என்ற நிலையை தமிழகத்தில் காவல் துறை தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒரு சில அரசியல் மற்றும் அரசியல் சாரா இயக்கங்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், எங்களை கொச்சைப்படுத்தியும், பொதுக் கூட்டங்களும், பத்திரிகை செய்திகள் மூலமாகவும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வுகள் அத்தனையும் எங்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, பொது மக்கள் மத்தியில் ஆழ்ந்த மனவருத்தத்தையும், எரிச்சலையும் உண்டாக்கியிருக்கிறது. எங்களின் மூத்த தலைவர்களும் மனவருத்தத்தில் உள்ளனர். எனவே இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.