79 ‌விழு‌க்காடு கப்பல்கள் செல்லக்கூடிய வகையில் சேதுகால்வாய் அமையும் டி.ஆர்.பாலு!

திங்கள், 28 ஜனவரி 2008 (10:28 IST)
''2006-2007-ம் நிதியாண்டில் இந்திய துறைமுகங்களுக்கு வந்த 79 ‌விழு‌க்காடு கப்பல்கள் செல்லக்கூடிய வகையில் சேதுக்கால்வாய் அமையும்'' என்று மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூறியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா தான் பதவியில் இல்லாத நேரத்தில் எல்லாம் தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்றும், தி.மு.க. அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜனநாயக விரோத கூக்குரல் எழுப்புவது வாடிக்கையே.

கடந்த 2006-2007 நிதியாண்டில் இந்தியாவில் உள்ள 12 துறைமுகங்களிலும் வந்து சென்ற கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 864. இவற்றில் 50 ஆயிரம் எடைக்கு மேல் உள்ள கப்பல்கள் 4 ஆயிரத்து 422. ஐம்பதாயிரம் டன் எடைக்கு குறைவான எடையுள்ள கப்பல்கள் 16 ஆயிரத்து 442. ஒருவேளை சேதுசமுத்திர பணிகள் முடிவடைந்திருந்தால் மேற்குறிப்பிட்ட 16 ஆயிரத்து 442 கப்பல்களும் சேதுக்கால்வாய் வழியாக பயணம் செய்திருக்க முடியும்.

அதாவது, இந்திய துறைமுகங்களை தொட்ட கப்பல்களில் ஏறத்தாழ 79 ‌விழு‌க்காடு கப்பல்கள் செல்லக்கூடிய வகையில் சேதுக்கால்வாய் அமையும். இதன்மூலம் 424 கடல் மைல்கள் பயணதூரம் குறையும் என்பதோடு நேரமும் எரிபொருளும் மிச்சமாகும்.

யாரை எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பதை அறியாத ஜெயலலிதாவை தமிழக மக்கள் சென்ற தேர்தலில் எங்கே உட்கார வைக்க வேண்டுமோ? அங்கே ஓரங்கட்டி உட்கார வைத்து விட்டார்கள். எனவே ஜெயலலிதா இனிமேல் தனக்கு தெரிந்த வேலையை மட்டும் செய்வதுதான் அவருக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்