ஜனவ‌ரி 30ஆ‌ம் கருணாநிதி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி!

திங்கள், 28 ஜனவரி 2008 (10:21 IST)
ஜனவ‌ரி 30ஆ‌ம் தே‌தி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆ‌ம் தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். அன்று இந்திய நேரப்படி காலை 11 மணியிலிருந்து 2 நிமிடம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு, இந்த மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஏதுவாக வசதியுள்ள இடங்களில் அந்த நேரத்தை உணர்த்திட சங்கொலி அல்லது மணியொலி எழுப்பப்படும். அப்போது, ஆங்காங்கே நின்று, இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்படும்.

தலைமைச் செயலகத்திலுள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் 30.1.2008 அன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 11.02 மணிவரை மவுன அஞ்சலி அனுசரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து காலை 11.03 மணி அளவில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை முதலமைச்சர் கருணாநிதி செய்துவைப்பார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்பார்கள் எ‌ன்று கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்