நாளை குடியரசு தினம்: சாதனையார்களுக்கு முதல்வர் விருது வழங்குகிறார்!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:09 IST)
குடியரசு தினத்தையொட்டி மெரினா காந்தி சிலை அருகே நடைபெறும் விழாவில் ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குகிறார்.
நாளை காலை 8 மணிக்கு மெரினா உள்ள காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி வரவேற்கிறார். பின்னர் முப்படைத் தலைவர்களையும், கடலோர காவல் படை, காவல்துறை உயர் அதிகாரிகளையும் ஆளுநருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். இதை தொடர்ந்து அரசு துறை சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு நடக்கிறது. மாணவ-மாணவிகளின் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
பின்னர் முதலமைச்சர் கருணாநிதி வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம், மத்திய அரசு வழங்கும் ஜீவன் ரக்ஷா பதக்கம், மத நல்லிணத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை வழங்குகிறார்.
மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்கள் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி முதல் விழா முடியும் வரை போர் நினைவு சின்னத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை உள்ள காமராஜர் சாலையில் அனுமதி அட்டையுடன் வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.
இதே போல் காமராஜர் சாலையில் இருந்து நடேசன் சாலை சந்திப்பு வரை உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.