கடந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று, சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூ.3,068 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் ஒன்றினை லார்சன் அண்டு ட்யூப்ரோ நிறுவனம் அமைக்கும். இதன் மூலமாக சுமார் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறுவார்கள். கடலூர் மாவட்டத்தில், இன்னொரு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடக்கின்றன.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு தொழில் துறையின் முக்கியப் பங்கினை நன்கு உணர்ந்துள்ள அரசு, சிறு தொழில்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து ஊக்கப்படுத்த, அதற்கான தனிக் கொள்கையை விரைவில் வெளியிடும். இக்கொள்கையில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படும். இத்தகைய முயற்சியின் காரணமாக சிறு தொழில்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.