நதிகள் இணைப்பு தமிழக அரசு விரைந்து செயல்படுத்தும்!
புதன், 23 ஜனவரி 2008 (12:46 IST)
''தமிழகத்தில் தாமதமின்றி நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ளும்'' என்று ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுனர் உரையின் விவரம்: நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டுமென்றும்; அதன் முதற்கட்டமாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டுமென்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட, மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படாத நிலையே உள்ளது.
எனவே தான், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டத்தையாவது செயல்படுத்திட, மத்திய அரசு பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதியுதவி வழங்க வேண்டுமென்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், மேலும் தாமதமின்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும்.
மேலும், பருவ காலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத்தடியில் சேமித்துப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, ஒரு வல்லுநர் குழுவை இந்த அரசு அமைக்கும். நமது மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூலமாகச் சேமித்து, ஆண்டு முழுவதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்துவதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.