சென்னையில் கடந்து 4 ஆம் தேதி முதல் நேற்று வரை இரண்டு வாரங்களாக நடந்த புத்தகக் காட்சி முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இறுதி நாள் வரை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தது.
கவிதை, கதைப் புத்தகங்கள், புதினங்கள், சிறுகதை தொகுப்புகள் உள்ளிட்ட இலக்கியச் சார்பு வெளியீடுகள், கணினி தொழில்நுட்பத்தின் அறிவுச் செறிவூட்டும் புத்தகங்கள், ஜோதிடத்தில் இருந்து ஆன்மீகம் வரை எல்லா துறைகளையும் பிரதிபலித்த அருமையான புத்தகக் காட்சியாகும்.
இந்த 14 நாட்களில் 7 லட்சத்து 49 ஆயிரம் வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வந்ததாக இதனை நடத்திய தென்னிந்திய புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) ஆர்.எஸ். சண்முகம் கூறியுள்ளார்.
இந்த கண்காட்சியில் சிறுவர்கள் நூல்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இதேபோல கல்வி தொடர்பான புத்தகங்களும் நன்கு விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு புத்தக விற்பனை குறைவுதான் என்று பதிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
கடைசி நாளான நேற்று கூட பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஏதோ நேற்றுதான் புத்தகக் காட்சி துவங்கியதைப் போன்று மக்கள் வருகை இருந்தது.