''தமிழ்நாட்டில் 3வது அணி என்பது கனவு. அந்த அணி உருப்பட்டதாக சரித்திரம் இல்லை'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 68வது பிறந்த தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாழப்பாடி ராமமூர்த்தி காவிரி பிரச்சனைக்காக தன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். அவருக்கு சென்னையில் முக்கியமான ஒரு இடத்தில் தமிழக அரசு சிலை அமைக்க வேண்டும்.
தமிழக அரசு பர்மிட் மூலம் ரூ.200க்கு சிமெண்ட் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த பர்மிட் முறையை நீக்கி அனைவருக்கும் ரூ.200க்கு சிமெண்ட் விற்பனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 3வது அணி என்பது கனவு. 3வது அணி உருப்பட்டதாக சரித்திரம் இல்லை.
இலங்கை பிரச்சனை தீர்க்க ஒரே வழி ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தான். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் பிரச்சனை தீர்ந்து விடும். தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் சிமெண்ட் விலை உயர்வு, விடுதலைப்புலிகள் ஊடுருவல், அவர்களுக்கு ஆதரவு தரும் தலைவர்கள் பற்றியும், பொது விநியோக முறையில் உள்ள முறைகேடுகள் பற்றியும் பேசுவார்கள். விடுதலைப்புலியை ஆதரிப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.