கோழிக் காய்ச்சல் : திருச்சியில் 6 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு அமைப்பு!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (16:31 IST)
மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தில் கோழிக் காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியில் 6 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட வருவாய்துறை அதிகாரி நம்பிராஜன் கூறினார்.
இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம், மேய்ச்சல் நாயக்கன்பட்டி, மணச்சநல்லூர், கோனழை ஆகிய இடங்களில் 16 கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளுக்கு சென்று கால்நடை மருத்துவ குழுவினர் சோதனை செய்வார்கள்.
திருச்சி, முசிறியில் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் தலைமையில் ஒரு குழுவும், பிராணிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கோழிகளின் எச்சத்தை எடுத்து ஆய்வு செய்வார்கள். கோழிகளுக்கு நோய் எதுவும் தாக்கி உள்ளதா என்று சோதனை செய்வார்கள்.
தமிழகத்தில் கோழி நோய் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது என்று வருவாய்துறை அதிகாரி நம்பிராஜன் கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்த 20 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி கூறியுள்ளார்.