ராமர் பாலம் இயற்கையாய் அமைந்ததே - அமைச்சரவை வரைவு!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:33 IST)
சேது சமுத்திர திட்டத்திற்கு மிகப்பெரிய தடையாய் சித்தரிக்கப்பட்டு வரும் ராமர் பாலம் என்று கூறப்படும் மணல் திட்டு மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, அது இயற்கையாக ஏற்பட்டதே என்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலிற்கு உருவாக்கப்பட்டுள்ள வரைவில் கூறப்பட்டுள்ளது!

ராமர் பாலம் என்று அழைக்கப்படும் அந்த மணல் திட்டுப் பகுதி சேது சமுத்திர கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டங்களால் உருவாகும் மணல் திட்டுகள்தானே தவிர, அது மனிதரால் உருவாக்கப்பட்டது அல்ல என்று மத்திய அரசு நியமித்த 10 பேர் கொண்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையால் உருவாக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலிற்கு முன்வைக்கப்படவுள்ள இந்த வரைவின் அடிப்படையிலேயே, ராமர் பாலம் குறித்த வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யு.

இந்த வரைவிற்கு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போகும் மத்திய பண்பாட்டுத் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது என்று டெல்லி செய்திகள் கூறுகின்றன.

சேது சமுத்திரத் திட்டத்தின்படி கப்பல் போக்குவரத்திற்கு வழி செய்ய சேது கடல் பகுதி ஆழப்படுத்தப்படும் போது அதில் இந்திய தொல்லியல் துறையையும் ஈடுபடுத்த வேண்டும் என்று நிபுணர் குழு அளித்த பரிந்துரையை அமைச்சரவை வரைவு நிராகரித்தது மட்டுமின்றி, ராமர் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டுக்களை தேச அடையாளமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளது.

பொதுவாக மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட அமைச்சகம் உருவாக்கி மற்றொரு அமைச்சகத்தால் ஒப்புதலும் அளிக்கப்பட்ட வரைவு அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படுவது வழமையாக இருந்து வருவதால், ராமர் பாலம் தொடர்பான இந்த வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும், அதன் அடிப்படையில் மத்திய அரசின் வாக்குமூலம் தயாரிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்