இரயில் டிக்கெட் முன்பதிவு 90 நாளாக அதிகரிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல்!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (11:40 IST)
இரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் நாட்கள் எண்ணிக்கை 60-ல் இருந்து 90 ஆக அதிகரிக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களில் இருந்து முன்பதிவு செய்யும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 60 நாட்களாக இருந்த முன்பதிவு நாட்களை 90 நாளாக தெற்கு இரயில்வே அதிகரித்தது. ஆனால் 90 நாட்கள் முன்பாக முன்பதிவு செய்வதில், கம்ப்யூட்டரில் பிரச்சினைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, இரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை கைவிட்டது. மீண்டும் முன்பதிவு செய்யும் நாட்கள் 60 ஆக குறைக்கப்பட்டன.
இந்நிலையில் இரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் நாட்கள் வரும் பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து 60-ல் இருந்து 90 ஆக மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரயில் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யும் நாட்கள் 60-ல் இருந்து 90 ஆக உயர்த்தப்படுகின்றன. பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து இந்த திட்டம் அமலுக்கு வரும். இதன்படி, மே மாதத்துக்கான டிக்கெட்டுகளை பிப்ரவரி மாதத்தில் இருந்தே முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.