இதைத் தொடர்ந்து அலங்காநல்லூருக்கு மாடுபிடி வீரர்களும், காளைகளின் சொந்தகாரர்களும் குவியத் துவங்கினர். லாரி, டிராக்டர்களில் ஜல்லிக்கட்டு காளைகள் கொண்டு வரப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பார்வையாளர்கள் அமர்வதற்கு காலரிகள், தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது.
பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு துவங்கியது. அங்குள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் காளை முதலில் விடப்பட்டது. அதன் பிறகு மற்ற காளைகள் விடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட காளைகளும், அவற்றை அடக்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் குவிந்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் சீறிபாய்ந்து வந்தன. அந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரையொட்டியுள்ள கூத்தப்பார் கிராம மக்கள் இன்று காலை தங்கள் மாடுகளை வீதிகளில் அவிழ்த்து விட்டனர். உடனே இளைஞர்கள் பலர் அந்த மாடுகளை விரட்டி பிடித்தனர். தென் மாவட்டங்களின் மற்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.