தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது!
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதலாம் அமர்வு தடை விதித்தது. இந்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்ஞால் ஆகியோர் கொண்ட முதலான் அமர்வு, தமிழக அரசின் முழுமையான கண்காணிப்புடன், முழு பாதுகாப்பாக நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
தமிழக அரசின் மறுபரிசீலனை மனு மீது இன்று நடந்த விசாரணையில், விலங்குகள் நல அமைப்பின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்க்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை நிரந்தரத் தடையாக்க வேண்டும் என்று கோரினார்.
இதனை மறுத்து தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் நம்பிக்கை சார்ந்தது என்றும், எனவே தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றக் குழு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சில நிபந்தனைகளை விதித்து தடையை நீக்குவதாக உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், காவல் துறையின் முழு கண்காணிப்பின் கீழ்தான் நடத்தப்படவேண்டும் என்றும் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டத் தடையை உச்ச நீதி மன்றம் விலக்கிக் கொண்ட செய்தி எட்டியதும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டது. கடந்த 5 நாட்களாக பதற்றத்திலிருந்த அலங்கா நல்லூர், பாலமேடு பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாளையும், நாளை மறு நாளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.