ஆவின் ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: கருணாநிதி!

சனி, 12 ஜனவரி 2008 (10:05 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி, ஆவின் நிறுவனத்தின் 7310 ஊழியர்களுக்கு ரூ.73 லட்சம் செயலாக்க ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் வழங்கப்படும் செயல்திறன் ஊக்கத் தொகை, முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்து ஆண்டு காலமும் வழங்கப்படாமல் இருந்தது. 2006-ல் இந்த அரசு அமைந்தபின் கடந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி இந்த செயல்திறன் ஊக்கத்தொகை அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்கள் பணிசெய்த நாட்களின் அடிப்படையில் வழங்கப்படும். அதாவது, 2007-ம் ஆண்டில் 90 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு கடந்த ஆண்டைவிட 25 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 145 ரூபாய் வழங்கப்படும்.

91 முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 40 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 240 ரூபாயும், 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு 70 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 400 ரூபாயும், 200 நாட்களுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு 175 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 1000 ரூபாயும் செயலாக்கத் தொகையாக வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். இந்த ஆணையின்படி ஆவின் நிறுவனங்களில் பணிபுரியும் 7 ஆயிரத்து 310 ஊழியர்களுக்கு மொத்தம் ஏறத்தாழ 73 லட்ச ரூபாய் செயலாக்க ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது எ‌ன்று த‌மிழக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்