நடவடிக்கை இல்லையெனில் மாநிலம் தழுவிய போரட்டம் - முஸ்லீம் அமைப்பு

சனி, 5 ஜனவரி 2008 (11:53 IST)
ஈரோடு அருகே வழிபாட்டு தலத்தில் இறந்த பன்றியை வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடந்த சாலை மறியலால் தாராபுரத்தில் பெரும் பத‌ற்ற‌ம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 1399 பேர் கைது செய்து பின் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தது தாராபுரம். இங்குள்ள கண்ணன் நகரில் முஸ்லீம் வழிபாட்டு ஸ்தலம் உள்ளது. இதன் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு‌ ‌சில‌ர் பன்றியை கொன்று வீசி‌வி‌ட்டு‌ச் சென்றனர். இதையறிந்த முஸ்லீம்கள் ஒன்று கூடினர்.

காவ‌ல்துறை‌யி‌ல் நடந்த பேச்சு வார்த்தையில் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் தற்காலிக தீர்வு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மற்றொரு தரப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அதை கண்டித்து அப்பிரிவை சேர்ந்தவர் கூட்டம் நடத்தினர். அதில் பேசியவர்கள் முஸ்‌லீ‌ம் தரப்பை கடுமையாக தாக்கி பேசினர்.

இதனால் கொதிப்படைந்த முஸ்லீம்கள் இதை எதிர்த்தும், பன்றியை வீசியவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கக்கோரியும் தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதனால் கோவை டி.ஐ.ஜி., சீமா அகர்வால், ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் சோனல்மிஸ்ரா, கோவை காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் ூற்றுக்கு மேற்பட்ட காவ‌ல்துறை அதிகாரிகள், 500 காவ‌ல்துறை‌யின‌ர் தாராபுரத்தில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் முஸ்லீம்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஒன்று சேர்ந்தனர்.

அண்ணாதுரை சிலை அருகே இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதை தடுக்க காவ‌ல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குள் செல்வதற்குள் அவர்கள் அனைவரும் திடீரென பல்வேறு பாதைகளில் கலைந்து சென்றனர்.

அதன்பின் மீண்டும் அண்ணாதுரை சிலை அருகே ஒன்று கூடினர். அங்கு சாலையில் அமர்ந்து மற்றொரு பிரிவினரை கண்டித்து கோஷம் போட்டனர். அங்கிருந்த காவ‌ல்துறை அதிகாரிகள் ஊர்வலமாக செல்ல வேண்டாம் காவ‌ல்துறை வாகனங்களில் ஏறுங்கள் என்றனர். ஆனால் அவர்கள் மறுத்து காவ‌ல்துறை‌யினருட‌ன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள், "பன்றியை வழிபாட்டு தலத்தில் வீசியவர்களை எட்டு நாளுக்குள் குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்' என எச்சரித்தனர்.

பின்னர் அனைவரும் போலீஸ் வாகனம் மூலம் தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் தாராபுரத்தில் கலவரம் வெடிக்கும் சூழ்நிலையாக இருந்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

பல்வேறு ஊர்களிலிருந்து தாராபுரம் நோக்கி போராட்டம் நடத்த வந்தவர்கள் நகரின் எல்லையில் தடுத்து காவ‌ல்துறை‌யினரா‌ல் கைது செய்யப்பட்டனர்.
இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 225 பேர், திருப்பூரை சேர்ந்த 325 பேர், சூலõரை சேர்ந்த 100 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 100 பேர், காங்கேயத்தை சேர்ந்த 60 பேர் என ஆயிரத்து 391 பேர் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பின், இரவு 7 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் சத்தியமங்கலத்தில் முஸ்லீம்கள் சாலை மறியல் செய்ய திட்டமிட்டனர். காவ‌ல்துறை‌யின‌ர் ‌அ‌‌ங்கு கு‌வி‌க்க‌ப்ப‌ட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்