சென்னையில் நாளை துவங்கும் 31வது புத்தகக்காட்சியை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலை பள்ளியில் இப்புத்தகக் காட்சி 14 நாட்கள் நடைபெறுகிறது.
சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த கண்காட்சி வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புத்தகக்காட்சியை முன்னிட்டு பதிப்பகங்களும் புதிய நூல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில் 31வது சென்னை புத்தகக்காட்சி நாளை துவங்குகிறது. வழக்கத்தை விட 2 நாட்கள் கூடுதலாக புத்தகக் காட்சி நடைபெறுகிறது. நாளை (4ஆம் தேதி) துவங்கும் புத்தகக் காட்சி ஜனவரி 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய மேல்நிலை பள்ளியில் இக்கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 1,50,000 சதுர அடியில் 528 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், ஊடக நிறுவனங்கள் என 345 நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. வாசகர்களின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவு வசதிக்கான ஏற்பாடு, வாகனம் விடுவதற்கான வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு, இலக்கிய சொற்பொழிவு ஆகியவை நடைபெற உள்ளன.
கடந்த ஆண்டை போலவே குறும் படங்களும் திரையிடப்பட உள்ளன. மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, வாசகர்களுக்கு வினாடி, வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு முதல்வர் கருணாநிதி, எழுத்தாளர்களுக்கு விருது வழங்க ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தார். அந்த நிதியில் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளை மூலமாக 5 எழுத்தாளர்களுக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது. ரத்ததான முகாம் மற்றும் நீரிழிவு முகாம் நடத்தப்படுகிறது. இக் கண்காட்சியை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். இந்த தகவலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.