சென்னையில் காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2008ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமைதியாக மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவகையில் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். சென்னை கடற்கரை, வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் ஏராளமான பொது மக்கள் அங்கு வருவார்கள். அதனால் அங்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி, ஜேப்படி ஆகியவற்றில் குற்றவாளிகள் ஈடுபடக் கூடும். அதனால் பழைய குற்றவாளிகள் மீது காவலர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் கடற்கரை சாலை, அண்ணாசாலை, பெசன்ட் நகர், திருவான்மியூர், ராதாகிருஷ்ணன் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் தான் அனைத்து வாகனங்களும் நிறுத்த வேண்டும். மீறி நிறுத்தும் பட்சத்தில் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது. இருசக்கர வாகனத்தில் 2 பேருக்கு மேல் செல்லகூடாது. அதிவேகமாக செல்ல கூடாது. அப்படி செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுபவரின் உரிமம் ரத்து செய்யப்படும். நகரின் பல பகுதிகளில் சோதனை சாவடிகளிலும், "மே ஐ ஹெல்ப் யூ' மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
புத்தாண்டை கொண்டாடும் இளைஞர்கள் அடுத்தவருக்கு இடையூறு ஏற்படாமல் கொண்டாட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களின் பாதுகாப்பு பணிக்காக சென்னை நகர் முழுவதும் 8000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஆணையர் நாஞ்சில்குமரன் கூறினார்.