ஜவ்வாது மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வலியுறுத்தி 31 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் வாழ்கின்ற மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்காமல் தி.மு.க. அரசு காலம் தாழ்த்தி வருவதன் காரணமாகவும், இம்மக்களுக்காக செயல்பட்டு வரும் ஜமுனாமரத்தூர் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்க மலைவாழ் மக்கள் பல முறை விண்ணப்பித்தும் இதுவரை கடன் உதவி வழங்காமலும், இப்பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்காமலும் புறக்கணித்து வருவதன் காரணமாகவும் இங்கு வாழும் மக்களின் எதிர்கால வாழ்க்கை பெருத்த கேள்விக்குறியாகி உள்ளது.
தி.மு.க. அரசு, மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக ஜாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும், கூட்டுறவு சங்கத்தின் மூலம் அவர்களுக்குத் தேவையான கடன் உதவியை வழங்க வலியுறுத்தியும், இப்பகுதிகளில் உள்ள சாலைகளை உடனடியாக புதுப்பித்துத் தர வலியுறுத்தியும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் 31-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று கூறியுள்ளார்.