3 பேர் பயணித்தால் மோட்டார் சைக்கிள் பறிமுதல்: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை!

Webdunia

சனி, 29 டிசம்பர் 2007 (11:58 IST)
புத்தாண்டு தினத்தன்று ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது உள்ளிட்ட விதிமுறைகளை மீறும் செயல்களைச் செய்பவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "சென்னையில் விபத்துக்களை தடுக்க கடந்த 15-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜி.எஸ்.டி.சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, கடற்கரை சாலை, ஜி.என்.டி. சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவலர்களுடன் ஊர்க் காவல் படை மற்றும் தொண்டு நிறுவன ஆர்வலர்களும் மக்களுக்கு அறிவுரை கூறினர்.

இனிமேல் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றாலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

தாறுமாறாக வாகனம் ஓட்டினாலோ, செல் பேசியில் பேசிக் கொண்டு வண்டி ஓட்டினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கார்களில் செல்பவர்கள் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும்.

வழக்கமாக இரவு 11 மணி வரை இயங்கும் சிக்னல்கள் அனைத்தும் அதிகாலை 3 மணி வரை இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்