மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் கருணாநிதி இன்று நேரில் பார்வையிட்டு, வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தார். மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். 47க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார்.
மழை பெய்த சமயத்தில் தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் கருணாநிதி, நேற்று சென்னை திரும்பினார். வெள்ளச்சேதம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய கருணாநிதி, இன்று காலை கார் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட காரனோடை பழைய பாலத்தை கருணாநிதி பார்வையிட்டு, அதனை உடனடியாக செப்பனிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொன்னேரியை அடுத்த தத்தைமண்டி கிராமத்தில் 120 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதை முதலமைச்சர் பார்வையிட்டார். பயிர்கள் சேதம் குறித்து விவசாயிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம், 5 கிலோ அரிசி, மண்எண்ணெய், வேட்டி, சேலை வழங்கினார்.
அங்கிருந்து மீஞ்சூருக்கு வந்த கருணாநிதி, அங்கு பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினார். வெள்ளச்சேதம் பற்றி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கருணாநிதி கூறினார்.