இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த கூறுகையில், எந்த தேர்தல் வந்தாலும் தனித்து போட்டியிட விரும்புகிறோம். ஆனாலும் கூட்டணிக்கும் தயாராகவே இருக்கிறோம். எங்கள் தலைமையில்தான் அந்த கூட்டணி இருக்கும். தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணியாக இருக்கும். அதே சமயம் ஜாதிக்கட்சி, மதவாத கட்சிகளுக்கு எங்கள் கூட்டணியில் இடமே கிடையாது. எந்த கட்சிகள் வேண்டுமானாலும் எங்களுடன் வரலாம். ஆனால் அவர்களை சேர்ப்பதா? இல்லையா? என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். காங்கிரசுடன் கூட்டணி என்பதை இப்போது கூற முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அதுபற்றி முடிவு செய்வோம்.
பொது பிரச்சினைக்காக மற்ற கட்சிகளுடன் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் பிரச்சினை சரியானதாக இருக்கவேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகள் கடமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஊழலை ஒழிக்கவே முடியாது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது தலைமையை பொறுத்துத்தான் எல்லாம். நிர்வாகத்துக்கு தலைமை ஏற்பவர்கள் ஒழுங்காகவும், ஊழல் கறை படியாதவர்களாகவும் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
எனது வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியதில் கோயம்பேட்டில் உள்ள திருமண மண்டபத்தை இடித்தது, என் கல்லூரி மீது மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது என எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஊழலுக்கு எதிரான எனது பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த முடியாது.
கட்சியின் வளர்ச்சி திருப்திகரமாக உள்ளது. படித்தவர்கள் மத்தியில் கட்சி நன்றாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தேமுதிகவுக்கு அமோக ஆதரவு உள்ளது. மேலும் தேமுதிகவின் சார்பில் தேர்ந்தெடுக் கப்பட்ட ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஜனநாயகத்தில் ஏராளமானோர் அரசியலுக்கு வரும் போது, நடிகர்களை மட்டும் பிரித்துப்பார்ப்பது சரியல்ல. எனினும் மக்கள் தான் அவர்களை பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறினார்.