இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பெய்த தொடர் மழையால் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் வீடுகளை இழந்ததோடு மட்டுமுல்லாமல் சிறு கடை வியாபாரிகளும் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வீட்டை இழந்தோர், விளை பயிர்களை இழந்தோர், வியாபாரக் கடைகளை இழந்தோர், வேலை இழந்தோர் என்று அனைத்து தரப்பில் உள்ள மக்களையும் கணக்கெடுத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண தொகைகளையும், மீண்டும் தொழில் துவங்க தேவையான முதலீடும், வீட்டை கட்டிக் கொள்ள உதவித் தொகையும், இலவச அரிசி போன்ற அத்தியாவசிய பண்டங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு பொது சுகாதார துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நிவாரண உதவிகள் கட்சி அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்க அரசு நேர்மையோடு செயல்பட வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.