''சுயநலத்தை மறந்து செயல்பட்டால் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற நதிநீர் சிக்கல்களை எளிதில் தீர்த்துவிட முடியும். ஆனால் முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தையால் ஒரு பலனும் ஏற்படாது'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித் பேட்டியில், முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா முதல்வர்கள் டெல்லியில் பேசியிருக்கிறார்கள். ஆனால் முடிவு எதுவும் ஏற்படவில்லை. இத்தகைய பேச்சு வார்த்தைகளால் முடிவு ஏற்படாது, பலனும் கிடைக்காது. 1979 ஆம் ஆண்டில் இருந்து எத்தனையோ முறை இது குறித்து இரு மாநிலங்களுக்கு இடையே முதலமைச்சர்கள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் பலன் தரவில்லை என்பதால் தான் பிரச்சனை உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
உச்ச நீதிமன்றமும் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தீர்ப்பளித்தது. அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று ஆணையிட்டிருக்கிறது. இதற்குக் கேரளா முதலில் கட்டுப்பட வேண்டும். இந்த ஒரு அம்சத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். நதிநீர் அனைத்தும் தங்களுக்கே சொந்தம் என்று மாநிலங்கள் நினைப்பதால்தான் நதிநீர் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தச் சுயநலம் வடமாநிலங்களைவிட தென் மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது.
சுயநலத்தை மறந்து செயல்பட்டால் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற நதிநீர் சிக்கல்களை எளிதில் தீர்த்துவிட முடியும். நதிகள் இணைப்புகள் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றமும் இதற்குக் காலக்கெடு நிர்ணயித்திருக்கிறது. ஒரு ஆற்றுப் படுகையில் இருந்து இன்னொரு ஆற்றுப்படுகைக்கு நீரைத் திருப்பிக் கொண்டு போவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். பெரியாறு அணையின் மூலம் இந்த நோக்கம் ஒரு நூற்றாண்டுக்காலத்திற்கு முன்பே அமலுக்கு வந்திருக்கிறது. இந்தக் கொள்கை நிலைப்பாட்டை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இதைவிட்டுக் கொடுத்தால் நதிகள் இணைப்பு என்ற கனவு நிறைவேறாமலேயே போய்விடும்.
இதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக இருக்க வேண்டும். நதிநீர் பிரச்சனைகளில் தமிழக அரசும், முதலமைச்சரும் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.