மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசுகளிடம் நிதி கேட்க கூடாது: கருணாநிதி!

Webdunia

புதன், 19 டிசம்பர் 2007 (17:32 IST)
விமான நிலையங்கள், பெரிய ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் போன்ற மத்திய அரசுத் திட்டங்களின் செலவினங்களில் மாநில அரசுகள் பங்கேற்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இது, மாநிலத் அரசுகளிடமிருந்து மத்திய அரசுக்கு நிதி மாற்றம் செய்திடும் தலை கீழான நடைமுறையாகும். ஆகையால், மத்திய திட்டங்களுக்காக மாநில அரசுகள் நிதி செலுத்த வேண்டுமென வலியுறுத்தக்கூடாது என மத்திய அரசினைக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூறியு‌ள்ளா‌ர்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மைத் துறையில் தமிழகம் தேக்க நிலையை அடைந்தது. ஆனால் அதனை இந்த திட்ட காலத்தில் சரி செய்திட உறுதி கொண்டுள்ளோம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், வேளாண் தொழில் வருவாயைப் பெருக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விவசாயப் பணிகளைச் செம்மையாக மேற்கொள்ளல், அறுவடைக்குப் பிந்தைய சிறப்பான நிர்வாகத்திற்குத் துணைபுரிதல், சந்தைகளோடு இணைப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவை அத்தகைய நடவடிக்கைகளில் சிலவாகும்.

தமிழகத்தில் விவசாயக் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளதையும், நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நாங்கள் இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 1 லட்சத்து 16 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் தேசிய திட்டங்களோடு இணைந்து, குறிப்பாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துடனும், உணவுப் பாதுகாப்பு இயக்கத்துடனும் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த முறை நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஆறுகள் இணைக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து நான் கூறிய கருத்துகளை நினைவூட்டிட விரும்புகிறேன். ஆறுகளின் இணைப்பை ஒரு `தேசியத் திட்டம்' என அறிவிக்க வேண்டுமென்றும், அதற்குக் காலவரையறையுடனான ஒரு செயல் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டு மென்றும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன். ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் மாநிலங்களுக்கு இடையில் உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம். மாநிலங்களுக்கிடையில் நல்லிணக்கம் நிலவிட வேண்டுமெனும் அக்கறையுடன், இத்தகைய கருத்து வேறுபாடுகள் நாட்டிலுள்ள சட்டங்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதும், அதிகார அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் முடிவுகளுக்கு மாநில அரசுகள் மதிப்பளித்து அவைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதும் இன்றியமையாதவையாகும்.

இரண்டு முதல் 14 வயது வரையுள்ள ஏறத்தாழ 70 லட்சம் குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முறை முட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். இந்த இரண்டு திட்டங்கள் குறித்தும், தேசிய அளவில் விவாதித்து இத்திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப் படுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடு‌த்து, விமான நிலையங்கள் மற்றும் பெரிய ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் போன்ற மத்திய அரசுத் திட்டங்களின் செலவினங்களில் மாநில அரசுகள் பங்கேற்க வேண்டுமெனக்கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இது, மாநிலத் அரசுகளிட மிருந்து மத்திய அரசுக்கு நிதி மாற்றம் செய்திடும் தலை கீழான நடைமுறையாகும். ஆகையால், மத்திய திட்டங்களுக்காக மாநில அரசுகள் நிதி செலுத்த வேண்டுமென வலியுறுத்தக்கூடாது என மத்திய அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்.

நகர மற்றும் கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் சுகாதார மேம்பாட்டிற்குத் தமிழக அரசு தலையாய முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மிக இன்றியமையாதவையாகும். இந்த அடிப்படையில் 11-வது திட்டத்தில் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் முக்கிய சுகாதாரத் திட்டங்களுக்குப் பெரிய அளவில் உதவிடும் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இறுதியாக, தற்போது துண்டு துண்டாக நிதி வழங்குவது போலல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருந்தக் கூடிய பொருத்தமான முறையில் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு நிதி உதவி அளித்திட வேண்டுமென்றும், இந்த 11-வது திட்டத்தில் இருந்து இத்தகையை மாற்றத்தை அறிமுகப்படுத்திட வேண்டு மென்றும் திட்டக் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்