புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுக்கு இதுவரை புகைப்படங்கள் தராதவர்கள் பெயர்கள் நீக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.
நெல்லையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணி 97.51 விழுக்காடு முடிவடைந்துள்ளது. 1-1-2008ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.
புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்வதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக இந்த குழுக்கள் ஆய்வு பணி மேற்கொள்ளும். ஜனவரி 11ஆம் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியிட திட்டமிட்டு இருந்தோம். சில மாவட்டங்களில் பணிகள் முடிவடையாததால், அந்த இடங்களில் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுவரை வாக்காளர் பட்டியலுக்கு புகைப்படம் கொடுக்காதவர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் பெயர்கள் நீக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. வந்ததும் உடனடியாக அமலுக்கு வரும் என்று நரேஷ் குப்தா கூறினார்.