எந்தவிதமான ஒப்பந்தமும் இல்லாத நிலையிலும், இலங்கைக்கு எல்லாவிதமான ராணுவ உதவிகளையும் இந்தியா செய்துகொண்டுதான் இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழர்களை இனப் படுகொலை செய்து வருகின்ற இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற தாக்குதல்களில், அவர்களுக்கு உதவிடவும், ஆலோசனைகள் வழங்கிடவும், இந்திய ராணுவ நிபுணர்களையும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளையும் இலங்கைக்கு அனுப்புவது என்று இந்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் அது குறித்து மிகுந்த வேதனையுடன், என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அக்கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
”இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர், இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள், உதவி வருகிறார்கள் என்பதையும் வேதனையுடன் தெரிவிக்கின்றேன். அவர்கள் தான், 1987ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இந்திய- இலங்கை உடன்படிக்கையைப் போன்ற ஒரு படுபாதக பாதுகாப்பு உடன்படிக்கையை இலங்கையுடன் இந்தியா செய்து கொள்வதற்காக, 2004ஆம் ஆண்டு தாங்கள் பொறுப்பு ஏற்ற வேளையில், தவறாக வழி காட்டினார்கள்.
ஆனால், அந்தக் காலக்கட்டத்தில், மூன்று முறை தங்களைச் சந்தித்து நான் விடுத்த வேண்டுகோளை, மிகக் கவனமாக, தொலைநோக்குப் பார்வையுடன் பரிசீலித்துத் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. ஆனால் ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லையே தவிர, தமிழர்களுக்கு எதிரான போரில், இலங்கை அரசுக்கு அனைத்து ராணுவ உதவிகளையும் மறைமுகமாக இந்தியா செய்து வருகிறது.
ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டு மக்கள் வாங்கிய மருந்துகள், உணவுப் பொருட்களை அவர்களுக்கு அனுப்புவதற்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இந்திய அரசு அனுமதி வழங்காதது மன்னிக்க முடியாத ஒன்றாகும். இலங்கை விமானப் படைக்கு ரேடார் உட்பட பல்வேறு ராணுவ உதவிகளை இந்தியா செய்து வருவதை எதிர்த்து, தொடர்ந்து பல கடிதங்களைத் தங்களுக்கு எழுதி இருக்கிறேன். எனவே, எந்த வகையிலும் இலங்கைக்கு ராணுவ உதவிகள் வழங்குவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, ஆழ்ந்த வேதனையுடன் தங்களை வேண்டுகிறேன்” என்று அந்த கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.