வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்தது. சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழை செய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், பரங்கிப்பேட்டை உள்பட பல இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை 6 மணியில் இருந்து மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மழை தூறிக்கொண்டே இருந்தது. அதனால் குளிர்ந்த காற்று வீசியது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆங்காங்கே பலத்த மழை பெய்யும்.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்யும். மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல கடலோர பகுதிகளில் தரைக்காற்று பலமாக வீசும். மற்றஇடங்களில் காற்று வழக்கத்தைவிட அதிகமாக வீசும் என்று ரமணன் கூறினார்.