நெல் குவிண்டாலுக்கு மேலும் ரூ.50 ஊக்கத்தொகை: முத‌ல்வ‌ர் அறிவிப்பு!

Webdunia

வியாழன், 13 டிசம்பர் 2007 (10:13 IST)
"நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லுக்கு தரப்படுகின்ற விலை போதாது என்றும், அதனை அதிகப்படுத்தித்தர வேண்டுமென்றும் விவசாயிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வந்ததின் அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதி இந்தப் பிரச்சினை குறித்து தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் ஆகியோருடன் விவாதித்தார்.

நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு 2006-2007-ல் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 40 ரூபாய் ஊக்கத்தொகையுடன் சேர்த்து, மொத்த கொள்முதல் விலையாக சாதாரண ரக நெல்லுக்கு 620 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 650 ரூபாயும் என்று மத்திய அரசு அறிவித்தது. 2007-2008-ல் முதல் ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.675 வீதமும், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.645 வீதமும் ஆதாரவிலையாக நிர்ணயித்து, மத்திய அரசு ஆணை வெளியிட்டது. ஆனால், 2006-2007-ல் ஊக்கத் தொகையாக 40 ரூபாய் வழங்கியதைப்போல, 2007-2008-க்கு நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

எனவே, ஊக்கத்தொகை வழங்கக்கோரி மத்திய உணவு மற்றும் விவசாயத்துறை மந்திரிக்கு, தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியதன் காரணமாக மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 வழங்கிட முன்வந்தது. இந்தநிலையில், கோதுமைக்கு குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் என்று ஆதாரவிலையை மத்திய அரசு நிர்ணயித்ததால், நெல் சாகுபடிக்கான செலவு கோதுமை சாகுபடிக்கான செலவைவிட அதிகம் என்பதை விளக்கி நெல் கொள்முதல் விலையையும் உயர்த்திட வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதன்பின்னர் தமிழக அரசு வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை ஏற்கனவே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50 என்று அறிவித்ததற்கு மாறாக, ரூ.100 ஊக்கத்தொகை என்று அறிவித்தது. இதன்படி தற்போது முதல் ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.775 வீதமும், சாதாரண ரக நெல்குவிண்டால் ஒன்றுக்கு ரூ.745 வீதமும், விவசாயிகளுக்கு வழங்கி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதன் பின்னரும் நெல்லுக்கான கொள்முதல் விலை போதவில்லை என்ற குறைபாடு விவசாயிகள் சார்பாக தெரிவிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் கருணாநிதி தமிழக அரசின் சார்பில் குவிண்டால் ஒன்றுக்கு மேலும் ரூ.50 ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். எனவே தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் முதல்ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.825 வீதம், சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.795 வீதமும் வழங்கப்படும். இதனால், தமிழக அரசுக்கு 82.50 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதி முதலமைச்சர் இந்த முடிவினை எடுத்திருக்கிறார் எ‌ன்று அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்