குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி எழுதிய "தர்மயோக்'' என்ற நூலில் `மலம் அள்ளுவது யோக நிலையை அடைவதற்குச் சமம், அந்த பணி கடமையாற்றுபவருக்கும் கடவுளுக்கும் மகிழ்ச்சி கொடுக்கக் கூடியது' என்று குறிப்பிட்டிருந்தார்.
நரேந்திர மோடியின் இந்த கருத்தை கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது, மோடி எழுதிய நூலின் நகலை அவர்கள் தீயிட்டு எரித்தனர். இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். போராட்டம் நடத்திய மேலும் 300 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வேனில் கொண்டித்தோப்பு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
போராட்டத்தின் போது கி.வீரமணி பேசுகையில், நரேந்திர மோடி மலம் அள்ளுவது பற்றி கூறியிருக்கும் கருத்துக்கள் மனதை புண்படுத்துகின்றன. தமிழகத்தில் மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமை இருக்கக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தியாவில் 6 லட்சத்து 76 தொழிலாளர்கள் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடுமையை அனுமதிக்கக் கூடாது என்றார்.
தொல். திருமாவளவன் பேசுகையில், பெரியார், அம்பேத்கார் ஆகியோர் மலம் அள்ளும் கொடுமையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் வழியில் இந்த கொடுமையை எதிர்த்து நாங்களும் போராடுவோம். இந்த கொடுமை சமூகத்தில் நிகழ அனுமதிக்க மாட்டோம் என்றார்.