நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் தனியார் காகித ஆலை அமைக்க அனுமதித்தால் கோட்டை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சிக்குட்பட்ட மாடகாசம்பட்டியில் 35 ஏக்கர் பரப்பில் தனியார் காகித ஆலை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த மாதம் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆலை அமைக்கும் பணியை துவங்குவதாக இருந்தது.
ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காகித ஆலைக்காக கட்டிய பில்லரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர். அது தொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர் குப்புசாமியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆவேசமடைந்த மக்கள் மோகனூர் காவல்நிலையத்தை முற்றுகையிட சென்றனர். இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையில் பேச்சு நடத்தி அமைதி கூட்டம் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாடகாசம்பட்டி, கே.புதுப்பாளையம், பெரமாண்டம்பாளையம், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி உள்ளிட்ட ஒன்பது பஞ்சாயத்துக்கு உட்பட்ட 37 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், தோளூரில் நடந்தது.
ஊராட்சி தலைவர் நவலடி தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் செல்ல ராஜாமணி, ஊராட்சி உறுப்பினர் ராமசாமி, சிவசாமி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்: பொதுமக்கள், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காகித ஆலை நிறுவன பங்குதாரர்கள் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காகித ஆலையை அமைக்கக்கூடாது.
மாடகாசம்பட்டி பஞ்சாயத்து தீர்மானம், கிராம சபை தீர்மானம் ஆகியவற்றில், இப்பகுதியில் காகித ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு துறையும், மாவட்ட நிர்வாகமும் தனியார் காகித ஆலை துவங்க அனுமதி அளித்ததை வன்மையாக கண்டிக்கிறோம்.
காகித ஆலை அமைய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோட்டை முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.