போலி ஓட்டுநர் உரிமங்களைத் தடுக்க வகை செய்யும் ஸ்மார்ட் கார்டு முறை, தமிழகத்தின் மூன்று இடங்களில் முன்னோடித் திட்டமாக விரைவில் போக்குவரத்து துறை செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் ஓட்டுநர், பழகுநர் உரிமங்கள் "லேமினேஷன்' செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த முறையில் போலியான கார்டுகள் உருவாக அதிக வாய்ப்புள்ளன. அசல் உரிமங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து கம்ப்யூட்டரில் பெயர் உள்ளிட்ட விவரங்களை மாற்றி போலிகளைத் தயாரிப்பது எளிதான காரியம். இந்த போலிகளை தடுக்க தற்போது தமிழக அரசு "ஸ்மார்ட் கார்டு' முறை அமல்படுத்தப்பட உள்ளது.
ஸ்மார்ட் கார்டில் சிறிய "சிப்' இருக்கும். அதில், வாகனங்களைப் பற்றிய முழுவிவரம் இருக்கும். கார்டில், வாகன ஓட்டுனரின் பெயர், முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும். தேவையான விவரங்களை இந்த கார்டில் சேர்க்க முடியும். ஆனால், ஒன்றை நீக்கி விட்டு, வேறு தகவலை சேர்க்க முடியாது. அதுமட்டுமின்றி ஒருவரின் கார்டை குறுக்கு வழியில் தயாரித்து வேறொருவர் பயன்படுத்த முடியாது.
முதல் கட்டமாக சென்னையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (தெற்கு), கடலூர், சிவகங்கை ஆகிய மூன்று இடங்களில் முன்னோடித் திட்டமாக "ஸ்மார்ட் கார்டு' முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தக் கருவியில் உள்ள விவரங்களை "ரீடர்' என்ற கருவி மூலம் படிக்க முடியும். இதற்காக, வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களிடம் ரீடர் கருவி வழங்கப்படும்.
கார்டை ரீடர் கருவியில் மாட்டினால் வாகனம் மற்றும் ஓட்டுநரின் முழு ஜாதகமும் தெரிந்து விடும். ஸ்மார்ட் கார்டின் வரவேற்பை பொறுத்து தமிழகத்தின் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.