''தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுத்தினார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மதுரையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காவிரி மீதான உரிமையை திராவிடக்கட்சிகளின் ஆட்சியின் போதுதான் இழந்தோம். தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்துதான் ஓரளவு நீர்வளம் கிடைத்தது. நமக்கு முழுக்க முழுக்க சொந்தமான முல்லை பெரியாறு அணையை சட்டரீதியாக ஒப்பந்த ரீதியாக கேரள அரசு ஒரு சட்டம் இயற்றி பழைய அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்போவதாக மிரட்டிக்கொண்டு இருக்கிறது.
சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசு காட்டி இருக்கும் அவசரத்தை முல்லை பெரியாறு அணை, பாலாறு பிரச்சினை விஷயங்களை விசாரணைக்கு கொண்டுவருவதில் ஏன் காட்டவில்லை. இதற்கு உரிய விளக்கத்தை அரசு தெரிவிக்கவேண்டும்.
பாலாற்றின் குறுக்கே 23 தடுப்பு அணைகளை ஆந்திரஅரசு கட்டிமுடித்து இன்னொரு அணையை கட்ட முயற்சி செய்து அதை தள்ளிப்போட்டு இருக்கிறார்கள். மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று ஒருவார காலம் அங்கு முகாமிட்டு சட்ட வல்லுனர்களையெல்லாம் சந்தித்து செல்வாக்கை பயன்படுத்தி தமிழ்நாட்டை காக்க முன்வர வேண்டும். அதேபோன்று பிரதமர் தலைமையில் தென்மாநிலங்களின் 5 முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி நதிநீர் சிக்கல்கள் பற்றி ஒன்றிரண்டு நாட்கள் விவாதித்து ஒருமுடிவுக்கு கொண்டுவரவேண்டும்.
தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், ஆள்கடத்தல் அடியோடு தடுத்து நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாட்டில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று ராமதாஸ் வலியுத்தினார்.